அருண் O -ve





என் பெயர் அருண்.  நான் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.  எனது ரத்த வகை ஓ நெகட்டிவ்.  ரொம்பநாள் வரை எனக்கு என் பிளட் குரூப் என்னவென்றே தெரியாது.  அதற்கான அவசியமும் வந்ததில்லை.  காரணம் ஆண்டவன் எனக்கு ஆரோக்கியமான உடலைக் கொடுத்திருக்கிறான்.  கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து ரத்ததானம் கேட்டு வந்திருந்தார்கள்.  ரத்தம் கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அம்மா மறுத்துவிட்டதால் கொடுக்கவில்லை.






இந்நிலையில் நான் படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூவில் பிரபல தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  எல்லா தகுதிச் சுற்றுக்களும் முடிந்த பின்னர் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வதற்கு அவர்களே ஒரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் வேலைக்குச் சேர்வதாகத் தெரிவித்தேன்.  அன்றே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தார்கள்.  ஜாயின் செய்யும் நாள் அன்று எச் ஆர் டிப்பார்ட்மென்டில் மதுரைப்பாண்டியன் என்பவரைப் பார்க்குமாறு சொன்னார்கள்.




நிறுவனத்தில் சேரும் நாளன்று எச் ஆர் டிப்பார்ட்மென்டின் காத்திருக்கும் அறையில் அமர்ந்திருந்தேன்.  "மிஸ்டர் அருண்" என்று ஒருவர் அழைத்தார்.  பார்ப்பதற்கு ஒல்லியாக வெள்ளையாக இருந்தார்.  மீசை இல்லை,  முகத்துக்கும் உருவத்துக்கும் சம்பந்தமில்லாத கண்ணாடி அணிந்திருந்தார்.  அவரைப் பார்த்தவுடன் எனக்குப் பிடிக்கவில்லை.  "ப்ளீஸ் கம்" என்று தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.  "மிஸ்டர் அருண், ஐயாம் மதுரைப்பாண்டியன்" என்றார்.  நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.  "என்ன மிஸ்டர் அருண், மதுரைப்பாண்டியன்னா பெரிய மீசையோட‌ கையில அருவாளை வச்சிருப்பேன்னு கற்பனை பண்ணிருந்தீங்களா" என்றார்.  ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு, "நோ சார்" என்றேன்.







வேலையில் சேர்வதற்கான பார்மாலிட்டிகளை ஒரு அரை மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தார்.  "மிஸ்டர் அருண், உங்களுக்கு தம், தண்ணி இந்தமாதிரிப் பழக்கம் இருக்கா?" என்றார்.  "நோ சார்" என்றேன். "நீங்க இருந்தாலும் இல்லன்னுதானே சொல்லுவீங்க" என்று சொல்லி ஏதோ உலகமகா ஜோக் சொன்னதுபோல் சத்தமாகச் சிரித்தார்.  அதன் பிறகு நான் வேலை பார்க்கப் போக வேண்டிய டிப்பார்ட்மென்ட் பற்றி சொன்னார்.  என்னுடைய டீம் லீடரை சந்திக்க வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார்.  என்னுடைய டிப்பார்ட்மென்டுக்கு ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருந்தது.  போகும்போது லொடலொடவென்று பேசிக்கொண்டே வந்தார்.  எனக்கோ எப்படா நம்ம டிப்பார்ட்மென்ட் வரும் என்றிருந்தது.  நமக்கு வர்ற பாஸும் இவரை மாதிரியே இருக்கக்கூடாதென்று கடவுளை வேண்டிக்கொண்டே நடந்தேன்.







ஒருவழியாக என் டிப்பார்ட்மென்டை அடைந்தோம்.  என்னுடைய டீம் லீடரைப் பார்த்தேன்.  நல்ல மனிதராகத்தான் இருந்தார்.  "மிஸ்டர் கணேஷ், ஹீ இஸ் மிஸ்டர் அருண், நியூலி ஜாயிண்ட்" என்று அறிமுகப்படுத்தி வைத்தார் மதுரைப்பாண்டியன்.  "வெல்கம் மிஸ்டர் அருண்" என்றார் என் டீம் லீடர்.  "ஹலோ சார்" என்றேன்.  "நோ நோ, கால் மீ கணேஷ், இங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவங்களை சார்னோ மேடம்னோ கூப்பிடக்கூடாது. பேர் சொல்லித்தான் கூப்பிடணும், இதுதான் உங்களுக்கு முதல் பாடம்" என்றார்.  "ஓகே, கணேஷ்" என்றேன்.  மதுரைப்பாண்டியன், "கணேஷ், அருண் வில் பி ஆன் லீவ் டுடே, ஓகே?" என்றார்.  கணேஷ் அவரை கேள்விக்குறியுடன் பார்த்தார்.  "யெஸ் கணேஷ், ஹி இஸ் ஓ நெகட்டிவ்" என்றார்.






எனக்கு ஒன்றும் புரியவில்லை.  பிளட் குரூப்புக்கும் ஜாயின் பண்ற அன்னைக்கே லீவ் போடுவதற்கும் என்ன சம்பந்தம் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன்.  கொஞ்சம் லேட்டாகப் புரியவரவே, அடப்பாவிகளா அப்படின்னா என்னைக் கூட்டிட்டுப் போய் ரத்தம் எடுக்கப் போறீங்களா, நீங்க நல்லா வருவீங்கடா என்று மனதுக்குள்ளேயே திட்டினேன்.  மதுரைப்பாண்டியன் கணேஷிடம் பேசிவிட்டு, "கமான் அருண், நான் லெட்டர் தர்றேன், அந்த ஹாஸ்பிட்டல் போய் பிளட் டொனேட் பண்ணிடுங்க, இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு ஆபிஸ் வந்தா போதும்" என்று அழைத்துச் சென்றார்.  ஆடு கூட தலையை சிலுப்பினாத்தானேடா வெட்டுவாங்க, இங்க என்னடான்னா என்னன்னுகூட சொல்லாம கூட்டிட்டுப் போறாரே என்று உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தேன்.


"மிஸ்டர் அருண், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியுது. என்னடா ஒண்ணுமே சொல்லாம பிளட் டொனேட் பண்ண கூட்டிட்டுப் போறாரேன்னு தானே" என்றார்.  மனசுக்குள்ளகூட நினைக்க விடமாட்டீங்கறீங்களே என்று நினைத்துக்கொண்டு, "அ.. ஆமா சார், இ.. இல்ல சார்" என்று வழிந்தேன். 


"அருண், ஓ நெகட்டிவ் ரொம்ப ரேர் டைப், கிடைக்கிறது கஷ்டம்"


"இல்லையே சார், ஏபி நெகட்டிவ் தானே ரேர்னு சொல்லுவாங்க"


"யு ஆர் ரைட் அருண், ஏபி நெகட்டிவ் தான் ரொம்ப ரேர், இந்தியாவில 0.2% மக்கள்ட்ட மட்டும்தான் இருக்கு, ஆனா அவங்களுக்கு ஓ நெகட்டிவ், ஏ நெகட்டிவ், பி நெகட்டிவ் பிளட்டும் கொடுக்கலாம், ஆனா உன்ன மாதிரி ஓ நெகட்டிவ் மக்களுக்கு ஓ நெகட்டிவ் பிளட் மட்டும்தான் கொடுக்க முடியும்.  அதனால தான் நம்ம கம்பெனியில ஜாய்ன் பண்றவங்கள்ல ஓ நெகட்டிவ் பிளட் இருக்கிறவங்களை நான் வலுக்கட்டாயமா பிளட் டொனேட் பண்ண வச்சிடறேன்" என்றார்.







ஆஸ்பத்திரியில் அந்த ஏசி அறையை அடைந்ததும் எனக்கு மனதில் கொஞ்சம் ஓரமாக பயம் மின்னல் போல வந்துபோனது.  ஆனால் அங்கே ஏற்கனவே இரண்டு பேர் ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் மனம் ஆசுவாசமானது.  முதலில் ஒரு நர்ஸ் வந்தாள்.


"சார் உங்க பேரு" என்றாள்.

"அருண்" என்றேன்.

"எங்கிருந்து வர்றீங்க?"

கம்பெனி பெயரைச் சொன்னேன்.

"ஓ, மதுரைப்பாண்டியன் சார் அனுப்பி வச்சாரா" என்றாள்.

"ஆமா"

ஒரு ஃபார்ம் கொடுத்தாள். பூர்த்தி செய்து கொடுத்தேன். "காலைல என்ன சாப்பிட்டீங்க?" என்று கேட்டாள். "இட்லி" என்றேன்.

இன்னொரு நர்ஸ் வந்தாள், கையில் ரப்பர் போன்ற ஒன்றை வைத்து இறுக்கமாகக் கட்டினாள்.  தட்டித் தட்டி ஒரு நரம்பைத் தேடிக் கண்டுபிடித்தாள்.  ஒரு சிறிய சிரிஞ்சில் கொஞ்சம் ரத்தம் எடுத்துக் கொண்டாள்.

"இவ்வளவுதானா?" என்றேன்.

"இல்ல சார், இது சாம்பிள்" என்றாள்

"சாம்பிளா, எதுக்கு?"

"உங்க‌ளுக்கு ர‌த்த‌ சோகை, கேன்ச‌ர், எச் ஐ வி ஏதும் இருக்கான்னு பார்க்க‌"
உள்ளே சென்றுவிட்டாள். 







சிறிது நேர‌ம் க‌ழித்து வேறு ஒரு ந‌ர்ஸ் வந்தாள்.  ஒரு படுக்கையில் சாய்வாக படுக்க வைத்தாள்.  மீண்டும் ரப்பர் கொண்டு கையில் கட்டு, ஒரு ஊசிக்குத்தல்.  இந்த‌முறை கடுமையாக வலித்தது.  ஏதேதோ ட்யூப்களை எடுத்து சொருகினாள். பின் ரப்பரின் இறுக்கத்தைத் தளர்த்தினாள்.  என் கை வழியாக சூடான ரத்தம் ட்யூபுக்குப் பாய்வது எனக்கே நன்றாகத் தெரிந்தது.  என் கையில் ஒரு பந்தைக் கொடுத்தாள்.  "சார், முடியும் வரை இதை அமுக்கிட்டே இருங்க" என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்தாள்.  "சிஸ்டர், என்னை விட்டுட்டுப் போறீங்களே" என்று பரிதாபமாகக் கேட்டேன்.  "இருக்கட்டும் சார், கொஞ்சம் டைம் ஆகும்" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.  மூக்கு உடைந்ததோ, இருந்தால் என்ன, என் ரத்தம் வீணாகக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.









சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தாள்.  என் பக்கத்தில் நின்று ரத்தம் ட்யூப் வழியாக பையில் சேருவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.  நானாக இருந்தால் மயங்கி விழுந்திருப்பேன்.

"எவ்வளவு எடுப்பீங்க?" என்றேன்

"ஒரு யூனிட்" என்றாள்

"ஒரு யூனிட்னா?"

"350 மில்லி"

அதற்குள் பை நிரம்பிவிட்டது போலும்.  கையில் குத்தியிருந்த ஊசியை எடுத்து அந்த இடத்தில் ஒரு பஞ்சை வைத்து கையை மடக்கச் சொன்னாள்.  சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கச்சொன்னாள்.







"சிஸ்டர், நான் கொடுத்த பிளட் எப்போ இன்னொருத்தருக்கு ஏத்துவீங்க?"

"சார், உங்க ரத்தத்தை வாங்கி நாங்க வேஸ்ட் பண்றோம்னு நினைக்கிறீங்க.  ஒரு நாளைக்கு எங்களுக்கு மட்டும் 5000 யூனிட் ரத்தம் தேவைப்படுது.  ஆனா இங்க வந்து டொனேட் பண்றவங்கள்ட்ட இருந்து 1000 யூனிட் மட்டும்தான் கிடைக்குது.  பத்தாததுக்கு வெளியில நிறைய பிளட் பேங்க்லருந்து வாங்கறோம்.  ஆனாலும் பத்த மாட்டங்குது.  உங்க ரத்தம் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ளயே ஆப்பரேஷனுக்கோ ஆக்சிடென்ட் ஆனவங்களுக்கோ போயிடும்.  ஏன்னா, உங்களுது ஓ நெகட்டிவ்.  கிடைக்கறது கஷ்டம்.  உங்க ரத்தத்தை வச்சு மூணு பேரக்கூட காப்பாத்துவோம், இன்னைக்கு நீங்க கொடுத்த ரத்தத்தை ரெண்டு நாள்ல உங்க உடம்பு திரும்பவும் உற்பத்தி பண்ணிடும்.  ரெண்டு மாசத்துல ரெட் செல்ஸ் சரியான அளவுக்கு வந்திரும்.  அதனால திரும்பவும் நீங்க மூணாவது மாசம் ரத்தம் கொடுக்கலாம்" என்று விளக்கத்தைக் கொடுத்தாள்.



அவள் கொடுத்த ஜூஸைக் குடித்தேன். பிஸ்கட் சாப்பிட்டேன். மனதில் அவள் சொன்னதே மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.  இன்று நான் செய்திருக்கும் காரியம் மூன்று பேர் உயிரைக் காப்பாற்றப் போகிறது என்ற திருப்தியே மனதில் மேலோங்கியிருந்தது.  மதுரைப்பாண்டியன் சார் மீது எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.


======


நண்பர்களே, படித்துவிட்டீர்களா.. கருத்தைச் சொல்லிட்டுப் போங்க... நீங்க சொல்லும் கருத்தை வைத்துத்தான் இதன் தொடர்ச்சியான "என் ரத்தத்தின் ரத்தமே" என்ற சிறுகதையை எழுதலாம் என்றிருக்கிறேன்.  நன்றி...